ஜூலை 8ம் தேதியிட்ட உணர்வு  பத்திரிக்கையின் விளம்பர சுவரொட்டிகளில் "இலங்கை முஸ்லீம்களுக்கு துரோகம்  செய்யும் தமிழக இயக்கங்கள்” என்ற தலைப்பில் ஒட்டப்பட்டிருந்தது அந்தப்  பத்திரிக்கையின் நீதி, நேர்மை பற்றி தெரிந்ததால் நாம் எப்போழுதும் வாங்கிப்  படிப்பதில்லை. இருப்பினும் என்னதான் துரோகம் இழைக்கப்பட்டது என்று  தெரிந்து கொள்ளலாம் என்று நண்பர் "ஒடிக்கி" ஜாபரிடம் வாங்கிப் பார்த்தால்  தமிழக முஸ்லீம் மக்களை இருகூறாக்கிய அமைப்பின் இலங்கை கிளையின் சார்பாக  வெளிவரும் ஒரு வலைதளத்தில (
www.rasminmisc.blogspot.com) வெளியிடப்பட்ட  "இலங்கை முஸ்லீம்களின் பிரச்சனையை ஊறுகாயாக்க வேண்டாம் தமிழக  அமைப்புகளுக்கு ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பில் வந்த கட்டுரையை உணர்வில்  பதிப்பித்து உள்ளார்கள் (என்ன! ஒரு சமுகநோக்கு என்று கட்டுரையை  படிப்பவர்களுக்குப் புரியும்)
உணர்வு வெளியிட்ட கட்டுரைக்கும் தற்போது நடந்து கொண்டு இருக்கும் சம்பவங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது வேறு விசயம்.
அன்பு இஸ்லாமிய உறவுகளே....
முதலில் நாம் இங்கே ஒன்றை தெளிவுபடுத்திவிட்டு மேற்படி கட்டுரை(கதைக்கு) விரிவான பதில்களைப் பார்ப்போம்..
புலிகளாக  இருந்தாலும் எவராக இருந்தாலும் அப்பாவி மக்கள், பெண்கள், நிராயுதபாணிகள்,  குழந்தைகளைக் கொல்பவர்கள் யாராக இருந்தாலும் நாம் கண்டிக்கின்றோம். நீங்கள்  சொன்னமாதிரி, சொன்னவிதத்தில் இலங்கையில் இஸ்லாமியர்கள் மீது படுகொலை  நிகழ்த்தப்பட்டு இருந்தால் கண்டிப்போம் இதில் எமக்கு எந்த  மாற்றுக்கருத்துமில்லை.
ஆனால் உறவுகளே...
உலகத்தில்  யூதர்களை மிஞ்சமுடியாது பிரித்தாள்வதிலும், சூழ்ச்சி புரிவதிலும்  என்பார்கள். அவர்களே செய்யமுடியாத ஒன்று உண்டு என்றால் அது  இஸ்லாமியர்களுக்குள் பிளவை ஏற்படுத்த முடியாதது.
ஆனால் இன்று  முஸ்லீம்களுக்குள் மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இஸ்லாமியர்களை பல  கூறுபோட்டு தந்தைக்கு எதிராக மகனையும், மகனுக்கு எதிராக தந்தையையும்  யூதர்கள் செய்யமுடியாத ஒரு குழப்பத்தை இஸ்லாமிய மக்களின் ஒரு சிறு  பிரிவினர் இடையே செய்து வருகின்றனர். இன்று ஈழத் தமிழ் மக்கள் மீது நாஜி  இட்லர்கூட செய்யாத ஒரு இன அழிப்புப்போரை 7 நாடுகள் துணையுடன் ரத்தவெறியன்  ராஜபக்சே செய்தான் என்பது உலகில் மனிதநேயம் கொண்ட அனைவருக்கும் தெரியும்.  ஆனால் 8வது நபராக எனது இஸ்லாமிய சமுகத்தில் இருக்கும் ஒரு சில நயவஞ்சக  சிங்களக் கைக்கூலிகள் திரைமறைவாக ஈழத்தில் நடந்த இன அழிப்புப்போரில்  உள்ளார்களோ என்று தற்போது எண்ணத்தோன்றுகிறது.
ஏன் என்றால் மேற்கண்ட  தளத்தில் எழுதியவர்கள் நோக்கமும், அதை வெளியிட்ட உணர்வு பத்திரிக்கையின்  நோக்கமும் மறைமுகமாக அல்ல வெளிப்படையாக நமக்கு வெளிச்சம்  போட்டுக்காட்டுகிறது. மேற்கண்ட கட்டுரையின் நோக்கம்தான் என்ன?
காத்தான்குடியில் பள்ளிவாசல் மீது புலிகள் தாக்குதல் நடத்தினார்கள்;
1992ல் வடக்கில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றினார்கள்;
கிழக்கில் முஸ்லீம்கள் மீது தாக்குதல்;
கிழக்கில் கருணா தலைமையில் முஸ்லீகள் மீது தாக்குதல்.
இப்படி பட்டியலிடும் கட்டுரையாளர் கூறுகிறார்
“இப்படி  பட்டியல் போட்டால் எவ்வளவு வேண்டுமானாலும் போடுமளவுக்கு துரோகங்களை  இழைத்தவர்கள் தான் இந்த விடுதலைப்புலித் தீவிரவாதிகள்” (ஏன் பாய்  அமெரிக்கவும் இந்துத்துவவாதிகளும் உங்களையும் இஸ்லாமியர்களையும்  அகிம்சாவாதிகள் என்றா சொல்றாங்க?)
நீங்க என்னதான் சொல்ல வர்றீங்கனு ஒருத்தனுக்கும் புரியல. யாருக்கும் எதுவும் புரிய கூடாதுங்கறதுதானே நீங்க இவ்வளவு கஷ்டப்படறீங்க...
சரி நீங்க சொல்கிற மாதிரியே நடந்திருந்தால் நாம் கண்டிப்போம். ஆனால் இந்தக் கட்டுரை மூலம் நீங்கள் சொல்ல வருபவை என்ன?
இறுதிப்போரில்  முழுமையாக புலிகளை (உங்கள் பார்வையில் புலித்தீவிரவாதிகளை) ஒழித்து  விட்டதாக உங்கள் இலங்கை இனவெறி அரசே கூறுகிறதே..! அப்படி இருக்க இன்று  இனப்படுகொலையால் வீடு இழந்து மகன், மகள், கணவன் என அனைத்தையும் இழந்து  முள்வேலி முகாம்களில் வாடிக்கொண்டு இருக்கும் எனது மனித உறவுகளான  அனைவரையும் இன்னும் புலிகள் என்றும் அவர்கள் தீவிரவாதிகள் என்றும் மீதம்  இருக்கும் எம் மக்களையும் அழிக்கவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமா?
உலகில்  எங்கும் நடைபெறாத ஒரு மனிதப்பேரழிவு நடந்துள்ளதே, மனிதநேய மார்க்கத்தை கை  கொண்டு இருக்கும் இஸ்லாமிய சமூகமும் அதன் இயக்கங்களும் அதை  எதிர்க்கவேண்டியது கடமை அல்லவா?
இலங்கை இனவெறி அரசை எதிர்த்து இங்கே  ஒரு சில எதிர்ப்பியக்கங்கள் நடந்து வருவதை சமூகநோக்கிலும் இஸ்லாமிய  பார்வையிலும் வரவேற்பதைவிட்டு விட்டு ஓர் இனமே அழிந்து, மிச்சம் இருக்கும்  மக்களும் தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கும்போது யாரை திருப்திப்படுத்த  இந்த கட்டுரை?
மனிதகுலப் பேரழிவின் காரணகர்த்தா ராஜபக்சேவின் குரலாக  உங்கள் குரலும் ஒலிக்கிறதே! என்ன வேதனை! அங்கே பாதிக்கப்பட்ட  ஈழமக்களுக்காக இங்கு இருக்கும் முஸ்லீம் அமைப்புகள் குரல் கொடுத்தால்  (எல்லா அமைப்புகளும், அனைத்து இஸ்லாமியர்களும் குரல்கொடுப்பதில்லை என்பது  வெட்கமே) இலங்கை முஸ்லீம்களுக்கு எப்படி துரோகம் ஆகும்..? உணர்வு  பத்திரிக்கை விளக்க வேண்டும்.
நீங்கள் சொல்லுவதற்கு எல்லாம்  தலையாட்ட தமிழக இஸ்லாமிய மக்கள் எல்லாம் முட்டாள்கள் அல்ல.. 1,50,000  மக்கள் படுகொலை செய்யப்பட்டதை வரவேற்று முஸ்லீம்களைக் கொன்றதற்கு  பலிவாங்கிவிட்டோம் என்று இங்கு இருக்கும் இஸ்லாமிய இயக்கங்களும், முஸ்லீம்  மக்களும் ஆனந்தப்படவேண்டும் என்று கூறுகிறீர்களா? அதைத்தான் இறைவேதமும்,  நபிகள் நாயகமும்(ஸல்) கற்றுக்கொடுத்ததா?
நாங்கள் கற்றுக்கொண்டது  எல்லாம் மனிதகுலம் எங்கு பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்காக குரல்  கொடுக்கவேண்டும். அவர்கள் நிறத்தால், மொழியால், இனத்தால் எப்படி  வேண்டுமானாலும் இருக்கட்டும் என்பது தான்.
நீங்கள் கூறுவது  (சும்மாதானே?) போலும், திரு குரான் கூறுவது போலும் ஆதாமின் மக்கள்தான்  அனைவரும் என்றால், ஈழத்தில் இனப் படுகொலையில் மாண்ட 1,50,000 மக்கள்  யாருடைய மக்கள்? அவர்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா.? நீங்கள் மாற்றிப்  பேசுகிறீர்களா? இல்லை குரானுக்கு மாற்றமாகப் பேசுகிறீர்களா?
இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்று பேசுபவர்களே..!
ஈழத்தில்  என் சகோதரிகள், என் தாய்மார்கள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாகி நிர்வாண  கோலத்தில் கொல்லப்பட்டதையும், குழந்தைகள், அப்பாவிமக்கள்  கொல்லப்பட்டதையும், எம் இளையவர்களை நிர்வாணப்படுத்தி கைகள், கண்கள்  கட்டப்பட்ட நிலையில் பின்மண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டதையும் சேனல்4  தொலைகாட்சி ஒளிபரப்பியதே... இதை உலகம் முழுவதும் உள்ள மனிதநேயம் கொண்ட  மக்கள் அனைவரும் பார்த்து கண்ணீர் வடிக்கும்போது உங்கள் கண்களை மட்டும்  மறைத்தது எது..?
உணர்வு பத்திரிக்கை தெரிந்தோ தெரியாமலோ வெளியிட்ட  கட்டுரையில் ஒரு புகைப்படம் உள்ளது (சுட்டி:  
http://issuu.com/qatartowheed/docs/unarvu_45)
அந்தப்  புகைப்படத்தில் இலங்கை இனவெறி அரசின் அச்சாணியாக இருக்கும் புத்தமத இனவெறி  சாமியார்களிடம், ஒப்பந்த கையெழுத்திடும் முஸ்லீம் தலைவர்கள் சிலர் உள்ளனர்.  (அப்படி என்றால் யாருடைய அரிப்பிற்கு இவர்கள் சொறிகிறார்கள் என்று  இப்பொழுது நம்மால் புரிந்து கொள்ளமுடிகிறதா?)
மனிதகுல வரலாறு முழுவதுமே விடுதலைப்போராட்டங்கள் தீவிரவாதமென்றும், பயங்கரவாதமென்றும் தூற்றப்பட்டுத்தான் வருகிறது.
கட்டுரையாளர் கூறுகிறார்
"தங்கள்  உடன் பிறந்த சகோதரர்களாய்ப் பழகிய இஸ்லாமிய சமுதாயத்தை கருப்புக் கண்ணாடி  கொண்டு பார்த்தார்கள் விடுதலைப் புலிகள். தங்கள் போராட்டம் நியாயமானது  என்றிருந்தால் அந்த போராட்டத்தில் முஸ்லீம்களும் கண்டிப்பாக  பங்கெடுத்திருப்பார்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் விடுதலைப்  புலிகளின் போராட்டம் நியாயமானதாகவோ ஒரு கோரிக்கையை முன்னிருத்தியதாகவோ  இருக்கவில்லை. தனி ஈழம் என்று அவர்கள் முன் வைத்த வாதம் கூட போலியானதுதான்.  ஒரு சிலரின் சுய விருப்பு வெறுப்புக்காக ஓராயிரம் தமிழ் சகோதரர்கள் ஆயுதம்  ஏந்த வேண்டிய நிலை உருவாக்கப்பட்டது.”
தமிழீழ போராட்டக் களத்தில்  முஸ்லீம்கள் பங்குபெறவில்லை என்று பச்சைப் பொய் பேசும் நியாயவான்களே! ஈழ  விடுதலைப் போராட்டத்தில் எத்தனை எத்தனை முஸ்லீம் போராளிகள், தளபதிகள்  களப்பலியானார்கள் என்பதை ஏன் மறைக்கிறீர்கள்? உங்கள் இனவெறி சிங்களக்  கூட்டாளிகள் கோபித்துகொள்வார்கள் என்பதாலா.? ஈழப்போராட்டத்தில் என்ன  நியாயமின்மையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள்?
ஈழ  விடுதலைப்போராட்டத்தில் முதல் முஸ்லீம் மாவீரர் லெப்.கேணல். ஜீனைதீன்  ஆவார். அது போல பல ஆண்டுகள் அகிம்சை முறையில் போராடிய ஈழத்து காந்தி என்று  போற்றப்படுகிற தந்தை செல்வா தலைமையில் சம உரிமை, அதிகாரப்பகிர்வு என்று  சாத்வீகமாகத்தானே நடந்தது. சிங்கள அரசு அதை காதில் வாங்காமல் போராட்டத்தை  கொடூரமாக ஒடுக்கினார்களே! தரப்படுத்துதல் என்ற கொள்கையில் தமிழ்மக்களின்  உரிமைகள் பறிக்கப்பட்டதே! இப்படியான ஒடுக்குமுறைகளுக்கு பின்புதான்  வரலாற்று சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தில் இனி சிங்களவர்களோடு  சேர்ந்து வாழ முடியாது என்றும் தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என்றும்  முடிவு செய்யப்பட்டது. அதற்கு பின்பு தான் ஆயுதம் தாங்கிய போராட்டங்களும்  நடந்தது என்ற வரலாற்றை கட்டுரையாளர் தமிழக இஸ்லாமிய மக்களுக்கு மறைத்த  நோக்கம் என்ன?
உங்கள் அண்டப்புழுகுகளை ஏற்றுக்கொள்ள நீங்கள் மூளைச்சலவை செய்து வைத்திருக்கும் கூட்டம் அல்ல நாங்கள். 
1983  ஆண்டு ஜூலை கலவரத்தில் எத்தனை தமிழ்மக்கள் கொல்லப்பட்டார்கள்! இங்கே  தமிழன் கறி விற்கப்படும் என்று போர்டு மாட்டிய கொடுமை எந்த நாட்டிலாவது  நடந்தது உண்டா? பிஞ்சுக் குழந்தைகளை கொதிக்கும் தார் டின்னில் போட்ட  கொடுமையைப் பற்றி எங்கள் தமிழக இஸ்லாமிய மக்களிடம் கூறும் நேர்மை உங்களிடம்  உண்டா..?
செம்மணி புதைகுழிக்கும், கற்பழிக்கப்பட்ட எனது  சகோதரிகளுக்கும், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று வீடு திரும்பாத  எனது சகோதரனை பிணமாகவாவது பார்ப்போமா என்று காத்திருக்கும் எனது  அன்னைக்கும் என்ன பதில் கூறுகிறீர்கள்?
ஈழவிடுதலைப் போராட்டத்தில்  அதன் நியாயத்தை புரிந்து கொண்டு நாட்டின் விடுதலைக்காய் ஆண்களும்,  பெண்களும் களப்பலியான வரலாற்றை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தும் கூட்டமே...  சூரியனை கைகள் கொண்டு மறைக்கமுடியாது. வரலாற்றை படைப்பவர்கள் மக்கள்!  உங்களின் பொய்களும் புரட்டுகளும் தொடர்ந்தால் வரலாற்றில் இருந்து மக்களால்  தூக்கி எறியப்படுவீர்கள்.
ஐ.நா.சபை அமைத்த நிபுணர்குழு இலங்கையில்  நடந்தது போர்க்குற்றமே என்று அறிக்கை கொடுத்துள்ள நிலையில், உலகம்  முழுவதும் இலங்கை அரசுக்கு நெருக்கடி வந்த சூழ்நிலையில் தங்களது  விசுவாசத்தைக் காட்டவும் தமிழகத்தில் ஈழத்தமிழ்மக்களுக்கு ஆதரவாக  ராஜபக்சேவுக்கு எதிராக நடந்துவரும் போராட்டங்களை திசைதிருப்பவே மேற்கண்ட  கட்டுரை என்பது நமக்குப் புரிகிறது. (பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்  கொடுப்பதை இஸ்லாம் ஹராமாக்கிவிட்டதா.? என்ன ஒரு மனிதநேயம்!)
இலங்கை  முஸ்லீம்களுக்கு புலிகள் அநீதி இழைத்தார்கள் என்றே வைத்துக்கொள்வோம்.  அதற்காக உலகமறிய நடந்த படுகொலைக்கு எதிராகப் போராடவேண்டாம் என்று இஸ்லாம்  கூறுவதாக குரான், ஹதீஸ் ஒளியில் நிரூபிக்க நீங்கள் தயாரா?
நீங்கள்  எழுதிய கட்டுரையும் அதை குதர்க்கமாக வெளியிட்ட உணர்வு பத்திரிக்கையும்  இக்கட்டுரை மூலம் என்ன செய்தி சொல்லவருகிறது? இனப்படுகொலையை நாங்கள்  ஆதரிக்கிறோம். தமிழக முஸ்லீம்களும் அமைப்புகளும் இனப்படுகொலையைப் பற்றி  பேசக்கூடாது என்றுதானே அதன் அர்த்தம்.
அப்படிப் பேசினால்  துரோகமென்றும், மார்க்கவிரோதிகளென்றும் தூற்றுவீர்கள். அன்று நடந்த  சம்பவங்களுக்காக அவர்கள் சாகத்தான் வேண்டும் என்ற அடிப்படையில் உங்கள்  மனிதநேயம் எல்லை கடந்து போய்விட்டது.
மேலும் அக்கட்டுரையில் தொடர்கிறது...
"இலங்கை  முஸ்லீம்களுக்காக நாம் அறிந்த வகையில் பகிரங்கமாக போராடிய ஒரே இஸ்லாமிய  அமைப்பு அப்போதைய தமுமுக. இன்றைய தவ்ஹீத் ஜமாத்தின் அமைப்பாளர்கள் அன்றைய  தமுமுகவின் அமைப்பாளர்களாக இருந்த நேரத்தில் இலங்கை முஸ்லீம்கள்  பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர்களுக்காக பகிரங்கமாக விடுதலைப் புலிகளை  எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்தார்கள். ஆனால் இன்றைய தமுமுகவினதும்  தமிழக இஸ்லாமிய அமைப்புகளினதும் நிலை அதுவல்ல. இவர்களின் இன்றைய நிலையைப்  பற்றி நினைக்கும்போது எந்த ஒரு இலங்கை முஸ்லிம் சகோதரனினாலும் தாங்கிக்  கொள்ள முடியாது. ஓட்டுக்காக சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக  இப்போதைய தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க  விஷயமாகும்”
ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை எதிர்த்து ஒரு சிறு  முணுமுணுப்பு கூட கேட்டுவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக, தங்கள் எஜமான  விசுவாசத்தை காண்பிக்கிறார்கள்.
அன்பு இஸ்லாமிய உறவுகளே...
நம்மைப்  பொருத்தவரையில் இலங்கை தமிழ்மக்களைப் பற்றியும், அவர்களின் விடுதலைப்  போராட்டத்தை பற்றியும் இவர்களைப் போன்றவர்கள் தவறான தகவல்களைக் கூறி நம்மை  முட்டாள்களாக்கியதோடு, இப்போது நம் சகோதர, சகோதரிகள் அநியாயமாக  கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதைக்கூட துரோகமென்கிறார்கள்.
2009  மே மாதம் நடந்த இறுதிப்போரிற்குப் பிறகு சர்வதேச அளவில் மக்கள் ஈழத்தில்  நடந்த இனப்படுகொலைக்கு எதிராக அணிதிரண்டதின் ஒரு பகுதியாக தமிழகமே  எழுச்சிகொண்டது. விரல் விட்டு எண்ணக்கூடிய சில இஸ்லாமிய அமைப்புகள்  ஈழத்தமிழ் மக்களுக்காக குரல்கொடுத்தார்கள். அவர்களில் மிக முக்கியமாக  மேற்கண்ட குழப்பவாதிகளே எதிர்பார்க்காத அளவிற்கு த.மு.மு.க., மனித  நேயமக்கள் கட்சி, இந்திய தவ்ஹீத் ஜமாஅத் போன்ற இஸ்லாமிய மனித நேயவாதிகள்  வீதிக்குவந்தவுடன் தனிப்பட்ட முறையில் மேற்கண்ட அமைப்புகளை எதிர்க்க  வேண்டுமென்பதற்காகவே எதற்காக எதிர்க்கிறோம் என்று தெரியாமலேயே  பிதற்றுகிறார்கள்.
மனித நேயமக்கள் கட்சியும், த.மு.மு.கவும், இந்திய  தஹீத்  ஜமாஅத்தும் ஈழத்தில் அப்பாவிமக்களும், பெண்களும், குழந்தைகளும் ஒரு  அநீதியான போரில் கொல்லப்பட்டு உள்ளார்கள் என்று உணர்ந்து, போரில்  அப்பாவிகள் நிராயுதபாணிகள் கொல்லப்படுவதை இஸ்லாம் என்றுமே ஆதரிக்காத ஒன்று  என்ற இஸ்லாமிய அடிப்படையில் எழுச்சிமிகுபோராட்டங்கள் நடத்தினால்,  அம்மக்களுக்கு ஆதரவு கொடுத்தால் உங்களுக்கு எங்கே எரிகிறது?
நீங்கள்  ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று நினைத்துக்  கொண்டிருக்கிறீர்களா..? ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததாம்...
நீதிமன்றத்தில்  வழக்கு நிழுவையில் இருக்கும்போது எந்தநாட்டிலும் நடக்காத ஒரு அரசியல்  கூத்தை தி.மு.க.வினர் நடத்தினார்கள். 'வாய்தாராணி' என்று ஜெயலலிதாவிற்கு  எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தி.மு.க.வின் தற்போதைய தொங்கு சதையான  (நாளை யாருடனோ) மேற்படி ஆட்கள் தங்கள் சொந்த சமுதாயத்தைச் சேர்ந்த இஸ்லாமிய  அமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இருக்குமொரு பிரச்சனையை வீதிக்கு  கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறவர்கள். தங்களது சொந்த சமுதாய  மக்களுக்கு எதிராக துப்பாக்கி தூக்குபவர்கள் (ஏங்க பாய் முஸ்லீம்களுக்குள்  பிரச்சனை வந்தால் குரான், ஹதிது அடிப்படையில் தீர்த்துக்கொள்ளவேண்டும்  என்பீர்களே எத்தனை ஜீம்மாபயானில் பேசி இருப்பீர்கள்..? ஊருக்குத்தான்  உபதேசமா) இன்று ஈழமக்களுக்காக ம.ம.க.வும், தமு.மு.கவும் ஒரு கொடுமைக்கு  எதிராக வீதிக்கு வந்ததை தாங்க முடியாமல் குய்யோமுய்யோ என்று கதறுகிறார்கள்.
எங்களுக்கு  அரசியல் வேண்டாம் என்று கூறிக்கொண்டே தேர்தலுக்கு தேர்தல் மாற்றி மாற்றி  இவருக்கு ஆதரவு, அவருக்கு ஆதரவு என்று, இஸ்லாமிய மக்களே சென்னையில்  கூடுங்கள், மதுரையில் கூடுங்கள், தஞ்சை திணறட்டும், மயிலாடுதுறை ஆடட்டும்  என்று கூப்பிடுபவர்கள் நம்மை அடகு வைத்தவுடன் (அதாங்க தேர்தல்) நீ  சுன்னத்ஜமாத், நாங்கள் வேறு ஜமாதென்று சொந்த சகோதரர்களுக்கு எதிராக  இருக்கும் உங்களைவிட இந்தநாட்டில் இம் மண்ணின் மைந்தர்களான இஸ்லாமியர்கள்  அரசியல் அதிகாரம் பெறவேண்டும், அனைத்து சமுக மக்களிடமும் நல்லுணர்வோடு  இருக்கவேண்டும் என்றும், அரசியல் அதிகாரம் இல்லாத வஞ்சிக்கப்பட்ட மக்கள்  அரசியல் அதிகாரம் பெறவேண்டும் என்ற அடிப்படையிலும் சமுக, பொருளாதார, கல்வி  மேம்பாட்டிற்காய் அரசியல் களம் காணும் ம.ம.கவைப் பாராட்டுகிறோம்.
தங்கள்  சொந்த சமுதாய நலன்களை மட்டும் பார்க்காமல் அனைத்து மக்களுக்காகவும் போராட  வேண்டும் என்ற பரந்த சமூக நோக்கிற்காகவும், ஈழத்தில் நடந்து முடிந்த  இனஒழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் த.மு.மு.க.  மற்றும் ம.ம.கவை நாங்கள் மனதாரப் பாராட்டுகின்றோம்
உங்களைபோல  எத்தனை பொய்யர்கள் வந்தாலும் இந்தப் போராட்டங்களை திசை திருப்பமுடியாது.  சரி நீங்கள் ஈழத்தமிழனுக்குத் தான் எதிரானவர்கள். இந்தியத் தமிழன் எங்கள்  தமிழக மீனவன் சிங்கள கடற்படையால் தினம் தினம் கொல்லப்படுகிறானே, அவனுக்கு  ஆதரவாக நீங்களும் உங்கள் தமிழகத்து தலைமை ஏஜண்டுகளும் என்றாவது போராடியது  உண்டா..?
உங்கள் சுயலாபத்திற்காக மட்டுமே வீதிக்கு வரும் நீங்கள்,  என் மீனவ சொந்தங்களுக்காக ம.ம.க. மற்றும் த.மு.மு.க. சகோதரர்கள் இலங்கை  தூதரக முற்றுகைப் போராட்டம் நடத்தினால் துரோகம் என்பதா? மனித நேயமே இல்லாத  நீங்கள் பாதிப்புக்கு உள்ளான இலங்கை தமிழ்மக்களுக்காகவும், தமிழக  மீனவர்களுக்காகப் போராடும் ம.ம.க, த.மு.மு.க., மற்றும் இந்திய தவ்ஹீத்  ஜமாத் பற்றி விமர்சிக்க எந்த யோக்கியதையும் இல்லை.
மேலும் கட்டுரையாளர் கூறுகிறார்...
“ஓட்டுக்காக  சொந்த சமுதாயத்திற்கு வேட்டு வைக்கும் அமைப்பாக இப்போதைய தமிழக இஸ்லாமிய  அமைப்புக்கள் மாறியிருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும்.”
தமிழக  இஸ்லாமிய அமைப்புகள் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைகளை எதிர்ப்பது சொந்த  சமுதாயத்திற்கு எப்படி வேட்டு என்பதை கட்டுரையாளரும் உணர்வு  பத்திரிக்கையும் விளக்கவேண்டும். நீங்கள்தான் அடிப்படை மனிதாபிமானம் இன்றி  இருக்கிறீர்கள் என்பதற்காக ஒட்டுமொத்த சமுதாயம் அப்படி இருக்காது. இந்த  நாட்டில் விலங்குகள் பாதிக்கப்பட்டாலே போராடுகிறார்களே, இலங்கையில்  பாதிக்கப்பட்டது எங்கள் மனித உறவுகள் அல்லவா? சக மனிதன் துன்பப்படும்போது  பார்த்துக் கொண்டிருப்பது மனிதமில்லை; நீங்கள் மனிதன் இல்லையா..?
முள்ளிவாய்க்காலின் துயரத்தை கட்டுரை எப்படி கொச்சைப்படுத்துகிறது?
"நாம்  தமிழர் கட்சி என்ற பெயரில் விடுதலைத் தீவிரவாதிகளுக்காக பந்தி போட்டுத்  திரியும் சீமானுடன் கூட்டணி. முள்ளிவாய்க்கால் பிரச்சினை என்ற பெயரில் புலி  ஆதரவாளர்களுடன் கூட்டணி.”
யாரை தீவிரவாதி என்கிறீர்கள்? மக்கள்  விடுதலைக்காக போராடும் போராளிகளை அரசுகளும், உங்களைப் போன்ற அடிவருடிகளும்  தீவிரவாதிகள் எனலாம். இப்படி காட்டிக் கொடுத்து வாழ்வதை விட மக்கள்  விடுதலைகாய் ஒருநாள் வாழ்ந்தாலும் அது தான் வாழ்க்கை என்போம். (ஏன் பாய்  ஈழவிடுதலைப் போராட்டத்தை, போராளிகளை சிங்களவர்களோடு சேர்ந்து காட்டிக்  கொடுத்தாக ஒரு பேச்சு உள்ளதே, காட்டிக் கொடுப்பவன் எந்த சமுதாயத்தைச்  சேர்ந்தவன் என்றாலும் தப்புதானே..?)
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்  எப்பொழுதும் சிங்கள அரசுகளுக்கு அடிவருடியாகத்தானே இருந்து வருகிறது.  என்றாவது தமிழர்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தது உண்டா..? (ஏங்க பாய்  நாங்க கேள்விப்பட்டது உண்மையா? ஈழமக்களை காட்டிக் கொடுத்துக்கொண்டிருக்கும்  கருணாவை சிங்கள அரசிடம் கூட்டிப் போய்விட்டது இலங்கையில் இருக்கும் ஒரு  முஸ்லீம் முக்கியப் பிரமுகர்தான் என்பது..?)
தமிழகத்தில் அனைத்து  மக்களுக்காகவும் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர்  கட்சி சிங்கள வெறிநாய்களால் குதறப்பட்ட அந்த மக்களுக்காகவும் போராடி  வருகிறது அவர்களுடன் இணைந்து ஈழத்தில் நடந்த இன அழிப்புக்கு எதிராகப்  போராடுபவர்களை கொச்சைப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடும் நடந்த போர்க்  குற்றத்தை எங்கே தமிழக முஸ்லீம்கள் புரிந்துகொண்டு ஒன்றுசேர்ந்து வீதிக்கு  வந்து இலங்கை அரசுக்கு எதிராக போராடி விடக்கூடாதே என்ற பதைபதைப்புடன்  நீங்கள் உங்கள் எஜமான விசுவாசத்தைக் காட்டுவது எங்களால் புரிந்துகொள்ள  முடிகிறது.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டபோரில் ஒட்டுமொத்த  தமிழ்ச்சசோதரர்களும், கொத்துக்குண்டுகளால், குழந்தைகள், பெண்கள்,  வயதானவர்கள் என்று குவியல் குவியலாக கொன்றுபோட்டதே சிங்கள ராணுவம்!  பாதுகாப்பு வளையப்பகுதி என்று அதற்குள் வரச்சொல்லி பாதுகாப்பு  வளையப்பகுதிமீது உலகளவில் தடை செய்யப்பட்ட ராசாயன குண்டுகள் போட்டு  முள்ளிவாய்க்கால் பகுதியை சிங்களராணுவம் சுடுகாடாக்கியதே.. வெள்ளைக் கொடி  ஏந்திவந்தவர்களை போர்மரபுகளை மீறி கொன்றுபோட்ட அநியாயம் நடந்ததே.. நீங்கள்  கொச்சைப்படுத்துவதற்கு எங்கள் அப்பாவி தமிழ்ச்சகோதரர்கள் பிணங்கள் தான்  கிடைத்ததா..?
முள்ளிவாய்கால் துயரம், மனிதநேயமே இல்லாத உங்களுக்கு  வேண்டுமானால் சாதாரணமாக இருக்கலாம். ஏன் என்றால் ஒரு மனிதக்கூட்டத்தின்  பெரும்பகுதிமக்கள் கொல்லப்பட்டதையும் அதற்கு எதிராக குரல்கொடுப்பதையும்  துரோகம் என்று நினைக்கும் உங்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கமுடியும்..!
ஈழத்தில்  அப்பாவி மக்களுக்காக போராடுகிறவர்களைப் பார்த்து இலங்கை முஸ்லீம்களுக்கு  துரோகம் என்பவர்களே… உங்களது தமிழகத்து தலைமை ஏஜண்டுகளிடம் சில கேள்விகள்  நீங்கள் கேட்கவேண்டும்..?
“யோக்கியன் வரான் சொம்பை எடுத்து உள்ள வை” என்பது எங்கள் தமிழ்நாட்டு பழமொழி.
1997ம்  ஆண்டு தமிழகத்து கோயமுத்தூரில் நடந்த இஸ்லாமிய மக்கள் மீது  இந்துத்துவவாதிகளாலும், இன்றைக்கு இவர்கள் சொம்பு தூக்கிக்கொண்டிருக்கும்  அன்றைக்கு ஆட்சியில் இருந்த தமிழகத்து கருணா(நிதி)யின் போலிசாலும் 19  அப்பாவி முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்களே, அவர்களின் சொத்துக்கள்  சூறையாடப்பட்டதே இஸ்லாமிய இளைஞர்கள் தீவிரவாதிகளென்று வீடு வீடாகப்  புகுந்து கைதுசெய்யப்பட்டார்களே…
சோதனை என்ற பெயரில் படுக்கை அறைவரை  கருணாநிதியின் போலீஸ் வெறியாட்டம் போட்டதே… பள்ளிவாசல் சோதனை, மதரஸாக்கள்  சோதனை, சோதனைச்சாவடி என்று போர் நடக்கும் பகுதி போல் கோவையை வைத்திருந்த  கருணா, கோகுலகிருஸ்ணன் கமிசன் என்ற தலையாட்டி கமிசனை அமைத்து அந்த கமிசன்  மூலம் கலவரத்திற்குக் காரணம் முஸ்லீம்கள் தான் என்று அறிக்கை கொடுக்கச்  சொன்ன கருணா...
இன்று வரை 19 முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு எவ்வித  ஆறுதலும், நியாயமும் வழங்காத கருணா... பாதிக்கப்பட்ட மக்களை சென்று  பார்க்காத கருணா... அப்போது நடந்த தேர்தலில் 19 முஸ்லீம் ஜனாஸாக்கள்  தாண்டியா கருணாவுக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று கேட்ட நீங்கள்  இன்றும் கருணாநிதிக்கு சொம்பு தூக்கிக் கொண்டு இருப்பது கோவை  முஸ்லீம்களுக்கு செய்யும் துரோகம் என்று வைத்துக்கொள்ளலாமா?
இந்த  நாட்டில் காங்கிரஸ் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் கொஞ்சமா?  முஸ்லீம்களுக்கு எதிராக பல இடங்களில் கலவரம் காங்கிரஸ் ஆட்சியில் தானே  நடந்தது. இந்த காங்கிரஸ் களவாணிகள் ஆட்சியில் தானே 1992ல் பாபர்மசூதி  இடிக்கப்பட்டது. எம் தமிழக மீனவர்கள் சிங்கள வெறிநாய்களால் கொல்லப்பட்டபோது  வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது இந்த காங்கிரஸ் தானே.... அப்படிப்பட்ட  காங்கிரசுக்கு தேர்தலில் ஆதரவு கொடுத்து பிரச்சாரம் செய்தது இந்திய  முஸ்லீம்களுக்கு துரோகமா.? நன்மையா..?
முஸ்லீம்களுக்கு கருணாவும்,  காங்கிரசும் செய்த துரோகத்திற்காய் என்றாவது அவர்கள் வருந்தியதுண்டா..?  எந்த வகையில் நீங்கள் அந்தக் கும்பலை ஆதரிக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு  நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா? உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது  ம.ம.கவையும், த.மு.மு.க. வையும் பற்றி பேசுவதற்கு? அவர்கள் மேல் எங்களுக்கு  ஆயிரம் விமர்சனம் உண்டு ஆனால் உங்களைப்போல் மனிதாபிமானம் அற்றவர்கள்  அல்ல...
இன்னும் கேளுங்கள் இந்த மரண வியாபாரிகளின் வாக்குமூலத்தை...
”கலைஞர்  கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரத்தில் இலங்கையில் கடுமையான யுத்தம்  நடந்து கொண்டிருந்த வேளை அந்த யுத்தத்தை நிறுத்துவதின் மூலமாக புலித்  தீவிரவாதிகளுக்கு உதவுவதற்கு திமுக முயன்ற நேரம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்  என்ற ஒரு அமைப்பைத் தவிர மற்ற அனைத்து இஸ்லாமிய இயக்கங்களுயும் திமுகவுடன்  கைகோர்த்தன”
அடப்பாவிகளா..!.
”இலங்கையில் கடுமையான யுத்தம்  நடந்துகொண்டு இருந்தவேளை” என்று நீங்களே ஒப்புக்கொண்டு ஒரு சராசரி  மனிதாபிமானம் கூட இல்லாமல் அந்த அநீதியான போரில் அப்பாவிமக்கள், பெண்கள்,  குழந்தைகள் கொத்து கொத்தாக கொல்லப்படுகிறார்களே என்ற சிறுமனிதாபிமானம் கூட  இல்லாமல் தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் மட்டும் கலந்து கொள்ளவில்லை என்று  பெருமையாக கூறிக்கொள்கிறீர்களே வெட்கமாக இல்லை.? நீங்கள் உண்மையான  முஸ்லீம்கள் தானா.? (தி.மு.க போரை நிறுத்த ஒரு ஆணியையும் பிடுங்கவில்லை  என்பது வேறு விசயம்)
உங்கள் வழிகாட்டி நபிகள் நாயகமா..? இல்லை  இரத்தவெறியன் ராஜபக்சேவா..? நீங்கள் மனித நேயமார்க்கத்தை சேர்ந்தவர்கள்  தானா..? உங்களுக்கும் ராஜபக்சேவுக்கும் என்ன வித்தியாசம்..!
தமிழகம்  முழுவதும் மக்கள் அநீதியான போரை நிறுத்துங்கள், அப்பாவி மக்கள்  கொல்லப்படுகிறார்களே.. சர்வதேச சமுதாயமே..! மனிதாபிமானிகளே..! இலங்கையில்  போரை நிறுத்த உதவுங்கள் என்று உண்மையான மனிதம் கொண்ட எங்கள் தமிழகத்து வீர  மறவர்கள், இளையவர்கள், பெண்கள், ஏன் திருநங்கைகள் கூட வீதிக்கு வந்து ஈழ  அப்பாவி மக்களுக்காக போராடினார்கள். எங்கள் தமிழகத்தில் இவனைப்போல் ஒரு  அறிவிற்சிறந்த மாவீரன் இனி எப்பொழுது கிடைப்பான் என்று எங்களை ஏங்கவைக்கும்  எங்கள் முத்துக்குமரன் உட்பட 19 பேர் தங்கள் தேக்குமர தேகத்தில் தீவைத்து  மாண்டு போனார்கள்.
ஏன் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் கூட போரை  உடனே நிறுத்தக்கோரி தீக்குளித்து மாவீரன் ஆனார். ஆனால் இதையெல்லாம்  வேடிக்கை பார்த்துக்கொண்டு அந்த போரினால் 1,50,000 மக்கள் மாண்டு போக  நீங்களும் காரணம் என்று இப்போழுது ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறீர்களே  என்ன வேதனை...
நாளை ஒரு நாள் உங்களுக்கு கேள்விக் கணக்கு என்று  ஒன்று உண்டு என்றால்.... அந்த மக்களின் சாவுக்கு உங்களிடம் கேள்வி  கேட்கப்படும்.... நடந்த அநீதியைப் பார்த்துக்கொண்டு இருந்தற்கும் கேள்வி  கேட்கப்படும்.
கோவை முஸ்லீம்கள் கொல்லப்பட்டபோது அதை தடுக்காத,  வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கருணாநிதிக்கும், பாபர் மசூதியை இடித்த  பொழுது வேடிக்கை பார்த்து, அதன் விளைவாக கலவரங்களில், பல முஸ்லீம்கள்  கொல்லப்பட்டு, பல பேர் ஆள்தூக்கி சட்டமான தடா சட்டத்தில் கைது  செய்யப்பட்டு, முஸ்லீம்கள் தீவிரவாதிகளென்றும், பயங்கரவாதிகளென்றும்  முத்திரை குத்தப்பட காரணமாயிருந்த காங்கிரஸ் களவாணிகளுக்கு நீங்கள் ஓட்டு  கேட்டு போகவில்லையா?
இது எந்த வகைத்தந்திரம்..? தினம் தினம் எனது  தமிழக மீனவன் கொல்லப்பட காரணமான சிங்களவனுக்கு ஆதரவாக பேசுகிறீர்களே இது  எந்த வகை தந்திரம்...?
ஈழப் படுகொலைக்கு உதவிய இந்திய கொலைகார  “கை”யுடன் நீங்கள் கூட்டுவைக்கும்போது விளிம்புநிலை மக்களுக்காக, தமிழக  மக்களின் உரிமைகளுக்காக, சர்வதேசப் போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு எதிராக  போராட்டக்களத்தில் உள்ளவர்களுடன் கைகோர்ப்பதும், களம் காண்பதும் எங்கள்  மனித உரிமைப்போராளிகள், இஸ்லாமிய அமைப்புகளின் மனித நேயக் கடமையே...
மனித நேயமே இல்லாமல் எம் ஈழமக்களின் ரத்தத்தினால் கரைபடிந்த உங்களை விட.... எங்கள் சகோதரர்கள் அவர்கள் மனிதம் எவ்வளவோ மேல்....!
இஸ்லாம் ஓர் இனியமார்க்கம் என்று பேசுபவர்களே...! எங்களின் கேள்விகளுக்கு நேர்மையான பதில் கூறமுடியுமா..?